Saturday, January 26, 2019

அன்புள்ள ஏவாளுக்கு - கடவுளைத் தேடியவள்


முன்குறிப்பு

ஒவ்வொரு ஆண்டும் புத்தக காட்சியில் ஆர்வ மிகுதியில் புத்தகங்களை வாங்கி, வாங்கிய முதல் மூன்று மாதங்களில் அதில் ஒரு ஐந்தாறு புத்தகங்களை வாசித்து, மிஞ்சியவற்றில் பத்து பதினைந்து பக்கங்களை வாசித்து , அப்படியே அந்த புத்தகங்களை தூர வைத்துவிட்டு வேலையில் முழ்குவதே வாடிக்கையையாகி போகிவிட்டது.   அப்படி வாசித்த புத்தகங்களை பற்றிய குறிப்புகளை எழுத வேண்டும் என நினைத்து அப்படியே போய்விடுகின்றது.   இந்தாண்டாவது எழுதி விட வேண்டும் என நினைத்து அப்படியான முதல் பதிவு இது.   இந்த பதிவுகள் சிறு குறிப்பு மட்டுமே அன்றி விமர்சனங்களோ  காத்திரமான இலக்கிய கட்டுரைகளோ அல்ல. 

The  Colour Purple  - அன்புள்ள ஏவாளுக்கு

” எனக்கு பதினான்கு வயதாகிறது. நான் எப்போதும் ஒரு நல்ல பெண்ணாகத்தான் இருக்கிறேன் இருந்திருக்கிறேன். எனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நான் புரிந்துகொள்ள நீ எனக்காக ஒரு சகுனம் காட்டக்கூடாதா “



தன் சிறுவயதிலையே தன் தாயை இழந்து தனக்கு என்ன நடக்கிறது என்ன புரியத் தொடங்கும் முன்னரே தன் தகப்பன் என நம்பபட்டவனால் சீரழிக்கப்பட்ட, அவன் வயதிற்கு ஒத்த இன்னொரு ஆணுக்கு மணமுடித்து தரப்பட்டு , தான் உரையாடுவதற்கு எந்த துணையுமில்லாமல் கடவுளிடம் உரையாடத்தொடங்கி , முடிவில் கடவுள் யார் என கண்டடையும் பெண்ணின் கதை இது. ஆங்கிலத்தில் ஆலிஸ் வாக்கர் எழுதிய “ தி கலர் பர்ப்பிள்” ளை தமிழில் “அன்புள்ள ஏவாள்” என ஷகிதா மொழிபெயர்த்துள்ளார். 



இந்த நாவலில் சீலிக்கும் ஷூக்கும் நடைபெறும் இந்த உரையாடலே இந்த நாவலின் மொத்த சாரம்சமும். 



“நான் சொல்ல வரும், நம்பும் விஷயம் என்னவென்றால், கடவுள் உனக்குள்ளும் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். நாம் இந்த உலகத்துக்கு வந்ததே அவரோடுதான். ஆனால் யார் அவரைத் தமக்குள் தேடுகிறார்களோ அவர்களே கண்டடைவார்கள். சிலசமயங்களில் நாம் அதை தேடாத போதும், என்ன தேடுகிறோம் என்றறியாத போதும் கூட அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். பிரச்சினைகளில், துயரங்களில் தான் பெரும்பாலான மக்கள் கடவுளைக் கண்டடைந்துகொள்கிறார்கள். 



என்ன சொன்னாய் ? “அது” வா? 



ஆம் “அது” தான். கடவுள் அவனோ அவளோ அல்ல. “அது” தான் 



சரி அது பார்க்க எப்படி இருக்கும்? 



அது எதைப் போலவும் இருக்காது. அது ஒரு படம் அல்ல காட்டுவதற்கு. மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அதைப் பார்க்க முடியாது. உன்னிடம் இருந்தும் தான். எல்லாமே கடவுள் தான் என்று நான் நம்புகிறேன். இதுவரையில் இருந்த, இப்பொழுதும் இருக்கிற, இனி இருக்கப்போகிற எல்லாமும்தான். அதை நீ உணரும்போது, அதை உணர்ந்து கொண்டதில் மகிழும் போது, நீ அதைக் கண்டடைகிறாய்.” 



உரையாட ஆளில்லாமல் 



“ அன்புள்ள கடவுளுக்கு “ என உரையாடலை தொடங்கி 



பின்னர் 



”பிரிய நெட்டி” 



என அன்பு தஙகையுடன் உரையாட ஆரம்பித்து 



பின்னர் 



”அன்புள்ள கடவுளே, நட்சத்திரங்களே, பிரியமான என் வானமே, அன்பான மக்களே, அன்பான எல்லாமுமே, அன்பு இறைவா” 



என அன்புதான் இறைவன் என கண்டுணரும் சீலி என்ற பெண்ணின் பயணமே இக்கதை. 



இந்த புத்தகத்தை ஷகிதா மிக சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். 



எதிர் வெளியீட்டில் கிடைக்கிறது.
  

அன்புடன்,

க. ராமசாமி





Share:

Friday, June 28, 2013

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் - தமிழில் யூமா. வாசுகி




நேற்றைய தினம் வாழ்வில் ஒரு முக்கியமான தினம். நண்பனாகி மூன்று வருடங்கள் கழிந்திருந்தாலும் விந்தை மனிதன் ராஜாராமனுடன் பேசிய காலம் நிமிடங்களில்தான் உண்டு. தன் வேலை விடயமாக சென்னை வந்திருக்கும் ராஜாராமனுடன் முதல் முறையாக தனிமையில் நிறைய நேரம் பேச வாய்த்தது நேற்று.  முதலில் ஒரு ஒன்னரை மணி நேரம் ஒரு ஹைடெக் தேநீர் விடுதியின் தொடங்கிய பேச்சு முடிந்த இடம் இரவு 8.30 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ்.  பேச்சின் போக்கு காமத்தை பற்றி திரும்பியதும் விரா அருந்ததி கதையை சொல்ல ஆரம்பித்தார்.   தேவ ரிஷிகளின் மனைவிகளின் மீது ஆசைப்பட்ட இந்திரன் அவர்களுடன் உறவுகொள்ள ஆசைப்பட , அதை அறிந்து கொண்ட இந்திரனின் மனைவி , ஒவ்வொரு ரிஷி மனைவி மாதிரியும் பொய்யுருவெடுத்து தானே கணவனுடன் உறவு கொண்டதாகவும், ஆனால் அவளால் அருந்ததியின் உருவத்தை பெற முடியாமல் தோற்றுப் போனாள் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார். அதன் மூலம் அருந்ததி ஒரு பெரிய பதிவிரதையாக காட்சிப் படுத்த படுவாதகவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் இந்த கதையை சொல்லிக்கொண்டிருந்த போது எனக்கு கிருஷ்ணபிரபு சொன்ன ஒரு புத்தகம் பற்றி நியாபகம் வந்தது. அந்த புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வாசிரம குறிப்பு ஒன்று இருப்பாதாக இங்கே (ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ்) உலவிக்கொண்டிருப்பதுவும் மனதின் குறுகுறுப்புக்கு ஒரு காரணம். ஆனால் வேடியப்பனிடம் கேட்கும் போது அந்த புத்தகத்தின் பெயர் மட்டும் நியாபகம் வரவில்லை. விராவிடம் கேட்டாலும் அவருக்கும் அந்த புத்தகம் அறிமுகம் இல்லை. இந்த தருணத்தில் சிறு வயதில் கோவில்பட்டி பஸ்ஸடாண்டில் சரோஜாதேவி புத்தகத்தை தயங்கி தயங்கி புத்தக கடை காரரிடம் கேட்டது நியாபகம் வந்தது. நல்ல வேலை இப்பொழுது அந்த தயங்கங்களும் இல்லை.  சரோஜாதேவி புத்தகமே கேட்டாலும் அதில் தப்பொன்றுமில்லை என்பதை தெளிவுற உணர்ந்திருக்கிறேன்(றோம்).  புத்தகத்தை பற்றிய நியாபகமிருந்த ஒரே குறிப்பு யூமா வாசுகி மொழிபெயர்ப்பு என்பது மட்டுமே.

மிகவும் சரியாக யூகித்து வேடியப்பன் தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரங்கள் என்ற இந்த புத்தகத்தை எடுத்து நீட்டினார்.  புத்தகத்தை சற்று புரட்டிய விரா எப்படிய்யா 64 பேர என்றார் ஆச்சர்யம் அடங்காமல்.  இதுக்கெல்லாம் நீங்கள் விராவை தப்பாக நினைப்பது ஆகாது. பேசிக்கலி அவர் ஒரு நல்ல மனிதர் அல்லது நாங்கள் இருவருமே.  டிஸ்கவரி புக் பேலசுக்கு முந்தைய ஹைடெக் தேநீர் விடுதியின் உரையாடலில் விரா மனிதனின் குணம் என்பது இரண்டு வகையானது. ஒன்று காமம் சார்ந்தது. இன்னொன்று வன்முறை சார்ந்தது.  இந்த உலகத்தில் ஆண் என்பவன் பெண்ணின் மீது காமத்தையும், வன்முறையையும் பிரோயிக்கிறான்.  அதே வன்முறையை குழந்தைகள் மீதும் நாம் பிரோயிக்க தவறுவதுமில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். முடிவில் இதெல்லாம் ஜெமோவில் கூறுகள் என்றும் சொல்லிப் போனார். 

இதெல்லாம் மனதினில் ஒட இன்று காலை சாப்பிட்டு முடித்த பின்னர் , சரோஜா தேவி புத்தகத்தை கையில் எடுத்த சிறுவனின் மனநிலையில் இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.  முதலில் சில பக்கங்களை தாண்டுவதற்குள்ளயே இது வேறு வகையான புத்தகம் என மணம் உணரத் தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக ஆண் என்பவன் வன்முறையின் துணையுடன் பெண் உடம்பின் மீது நடத்திக் காட்டிய அரசியலை, தன் புத்தி சாதுர்யத்தால் தகர்த்தெரிய முற்பட்ட ஒரு பெண்ணாகவே தாத்திரிக் குட்டி மனதில் பரவ ஆரம்பித்தாள்.  தான் பிறந்ததில் இருந்தே  அவள் ஒரு சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு தேவலோக சுந்தரியாகவே மற்றவர் கண்களுக்கு தெரிந்தாள்.  வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியினால், வயதில் பெரிய ஆண்களில் பாதிக்கு மேற்பட்ட ஆண்கள் அவளை மோகிக்க வேண்டியே அவளிடம் பைத்தியம் பிடித்து திரிந்திருக்கின்றனர். இதில் வேதனையே அவளின் தகப்பனும், அண்ணனும் அதில் அடக்கமென்பதே. 

இதெல்லாம் அவள் திருமணம் முடித்து , அவள் முதலிரவில் நடந்த ஒரு துயர் மிகு சம்பவமே அவளை ஆண்களை பலி வாங்க தூண்டியதாகத் தெரிகிறது.  அவளிடம் உறவு கொண்டதாக சொல்லப்பட்ட 64 ஆண்களை பற்றிய குறிப்புகள் எதுவும் எங்கேயும் இல்லை எனவும், தாத்ரிக்குட்டியை பற்றிய பாட்டி மார் கதைகளும், நாட்டார் கதைகளும் அவற்றினை பற்றிய புனைவுகளின் ஊடாக சென்று ஒரு ஆய்வுக் கட்டுரை மாதிரியான முயற்சிதான் தன்னுடைய இந்த முயற்சி எனவும் நூலாசிரியர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் சொல்கிறார். அப்படி ஒரு கதையே எம்.ஜி.ஆர் அவர்களின் பூர்வாசிரம குறிப்பாகவும் புத்தகத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த 64 பேரயும்  விசாரணையின் முடிவில் சாதி நீக்கம் செய்ததாகவும் அவர்கள் வீட்டை விட்டும் ஊரை விட்டும் விலகிச்சென்று எங்கெங்கோ வாழ்ந்து , கடைசியில் அறியப்படாதவர்களாவும் ஆகிப்போனதை சொல்லிப்போகிறது  இந்த புத்தகம். 

தாத்திரிக்குட்டியின் இந்த புரட்சி  , கேரள சமுதாய கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றிப்போட்டதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.  64 பேர்களில் ஒருவராக காட்டப்பட்டிருக்கும் கதகளி  கலைஞர் கவுங்கல் சங்கரப்பணிக்கர் சாதி நீக்கம் செய்யப்பட்டதாலயே, மேல் சாதியினரால் மேல் சாதியினருக்கென இருந்த கதகளி நடனத்தை கீழ்சாதியினரும் பங்குபெறும் மாதிரி ஜனரஞ்சமாக மாற்றி புரட்சிக்கு வித்திட்டதையும் புத்தகம் அழகாக காட்சிபடுத்தியிருக்கிறது.  

எல்லோரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவண புத்தகமிது. 

தாத்த்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்
மூலம் : ஆலங்கோடு லீலாகிருஷ்ணன்
தமிழில் : யூமா வாசுகி
விலை : 70 ரூபாய்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Share:

Thursday, March 21, 2013

முகவீதி - கவிதைப் புத்தகத்தின் முன்னுரை

தமிழின் மூத்த கவிஞர் திரு ராஜாசுந்தரராஜனின் முகவீதி புத்தகத்திற்கு திரு. சுந்தரராமசாமி எழுதிய முன்னுரை

---------------------------------------------------------------------------------

இந்த மண்ணில் ஒரு இளங்கவி

சுந்தர ராமசாமி

சமீப காலத்தில் தமிழில் தோன்றியுள்ள ஒரு இளங்கவி ராஜ சுந்தரராஜன். அபூர்வமாகவே இவரது கவிதைகள் சிறு பத்திரிக்கைகளில்கூடப் பிரசுரமாகி இருக்கின்றன.  தரமான கவிதைகளைத் தேடும் மனங்கள் நமக்கு இருக்ககூடும் எனில் அவற்றின் சூட்சும அவதானிப்புக்கு இக்கவிதைகள் இலக்காயிற்றா என்பதும் சந்தேகம்தான். கவிதை எனும் பெயரில் துணுக்குகளின் உற்பத்தி உச்சகட்டத்தில் இருக்கும் காலம். கழிவுப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் தரமானவை புதையுண்டு போகும் காலம். பதரிலிருந்து மணிகளைப் பிரிக்கும் விமர்சனமும் இங்கு நோயுற்றுக் கிடக்கிறது. ஒன்றில் அவை சுய லாபங்களைச் சார்ந்த தந்திரங்கள். தன்னைப் பிறர் தூக்க அச்சாரமாக தான் பிறரைத் தூக்கிக்கொண்டிருப்பது. அல்லது தனி நபர் குரோதங்களின் கத்தல்கள்; அல்லது பழைய தகவல்களை மென்று கொண்டிருக்கும் பத்திரிக்கைத் தொழில். இவற்றைத் தாண்டி வருபவை மிகச் சொற்பம்; புதிய பயிர்கள் முளை விடுகின்றன.  பாறைகளின் இருக்கில் முளைக்கும் செடிகள் போல் தலை தூக்குகின்றன. இவை மரங்களாகி இவற்றின் வேர்கள் பாறைகளை உடைக்க வேண்டும். விமர்சனம் தோற்கும் களத்தில் படைப்பு முன்னேறிச் செல்லவேண்டும்.

புதுக் கவிதையின் வேகமான எழுச்சிக்குப்பின் இப்போது கால் நூற்றாண்டு ஒடி விட்டது. இதுகாறும் வெளிப்பட்டுள்ள முக்கியமான கவிதைக் குரல்களை இப்போது பரிசீலனை செய்து பார்ப்பது நம் பார்வையைச் செம்மைபடுத்திக்கொள்ள உதவும். முற்றிலும் நம் அனுபவங்களை சார்ந்த, இயற்கையான, ஆரோக்கியமான கவித்துவங்கள் வழியாகவே நாம் உன்னதங்களை அடையமுடியும்.

அனுபவங்களைக் குலைக்கும் படிப்பின் பாரங்களை இறக்கி, நம் வாழ்வை சார்ந்த கவிதைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  மிகத் தொலைவில் இருப்பவற்றைப் பிடித்துப் போடுவதில் படிமம் தேடும் கவி மணங்கள், தம் விரல் நுனிகளால் ஸ்பரிசிக்கக்கூடிய எளிமையான், ஜீவாதாரமான பேரனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நூற்றாண்டுக்குரிய துக்கங்கள் அனைத்தும் மேறகத்திய வாழ்வை மிகக் கடுமையாகப் பாதித்துச் சீர்குலைத்து இருக்கின்றன. இந்த வாழ்வு அளித்த வடுக்க்களைப் பெற்றுக்கொண்ட கவித்துவ ஆளுமைகள் அங்கு மிகச் சிக்கலாக வெளிப்பட்டுள்ளன. இங்கோ வாழ்க்கை மற்றொரு தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாழ்வுக்குரிய கஷ்டங்களுடனும், பிரச்சினைகளுடனும், சில நிம்மதிகளுடனும். இங்கும் இழை பிரிகின்றன மனித உறவுகள். ஆனால், இன்னும் முற்றாக அவை கருகிப் போய்விடவில்லை. மேற்கத்திய கவிதை முயற்சிகளைப் படிப்பு மூலம் அறிந்துகொண்ட கவிஞர்கள், இங்கு சுய அனுபவங்களைப் பின் தள்ளி, நவீன மோஸ்தர்களின் பிரமைகளுக்கு ஆட்பட்டு, தம் கவிதைகளையும் சிக்கலாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த சிக்கலை நம் வாழ்க்கை அனுபவங்கள் நியாயப்படுத்துவதாகத் தெரியவில்லை. நம் வாழ்வுக்கு உரித்தான அனுபவங்கள் ராஜசுந்தரராஜனிடம் கவிதையாக மிளிரும் பாங்குதான் இவரைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை நமக்கு வற்புறுத்துகிறது.  நம்மால் இவரது கவித்துவ அனுபவங்களை நினைவுகூர்ந்து இனங்கண்டு கொள்ள முடியும். நம் அருகில் வெகு ஸ்தூலமாக இவரது இருப்பை உணரவும் முடியும். இங்கு அனுபவஙகள் அவற்றை எழுப்பிய தளத்தின் புத்துணர்ச்சியோடு வெளிப்படுகின்றன. நேராக, இயற்கையாக, எளிமையாக  அனுபங்களை வலுக்கட்டாயமாக் மற்றொரு தளத்திற்குத் தூக்கிச் சென்று தத்துவ முலாம் பூசுவதிலோ ‘கவித்துவத்தை’ ஏற்றுவதிலோ, இல்லாத சமூக ஆங்காரம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதிலோ, இவர் முற்றாக நம்பிக்கை அற்றவர் என்பதை இவரது ஒவ்வொரு கவிதையும் காட்டுகிறது.
ராஜ சுந்தரராஜன் கவிதைகள் அவற்றிற்கே உரித்தான குரலைக் கொண்டிருக்கின்றன. படிப்பு, புலமை ஆகியவற்றின் உபாதைகள் இன்றி, அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம். பொதுப் புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாதயத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரக்கியமாகவும் இருக்கிறது.  புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என்பதால் அவற்றின் சலனங்களும் இவரைப் பாதிக்கின்றன. ஜீவன்களின் பரிதவிப்பு, இயற்கையின் கோலங்கள், தனிமை, வாழ்கைப் புதிர்கள், பருவ மாற்றங்கள், மனித மனோபாவங்கள், இயலாமைகள், இயற்கை எனும் ஆச்சாரியம் எல்லாம் இவரைப் பாதிக்கின்றன. ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் விலகி நிற்கும் மனம் இவருடையது. விவரணங்களில் நுட்பம் கொண்ட, நுட்பங்களில் கவனம் பதியும் சாட்சி. மிகை, மேல் ஸ்தாயி இவற்றில் நம்பிக்கை இல்லாத சாட்சி. ஆனால் அனுபங்களைப் பதிவு செய்யும் பாங்கிலும், அவற்றின் வெளிப்பாட்டு நுட்பத்திலும், துல்லியத்திலும், சிக்கனத்திலும், செய்யுள் பதிவுகளாக இவரது வரிகள் முடிய மறுத்து, வாழ்வின் அடிப்படையை ஏதோ ஒரு விதத்தில் ஸ்பரிசித்துவிடும் அதிர்வுகள் தந்து, கவிதைகளாக ரூபம் கொள்கின்றன.  மொழி, புத்தகத்திலிருந்து மனிதன் நாவிலும்; குரல், மேடைக் கும்பலிலிருந்து தனி மனிதனின் ஆத்மாவுக்குள்ளும் உறைய விரைவதை உணர முடியும். சங்க காலக் கவிதையின் பொதுத் தன்மை மீண்டும் இப்போது இங்கு தோன்றி, இக்காலங்களுக்குரிய பாதிப்புகளையும் பெற்றுக்கொண்டு, தம் தொழிலைத் தொடர்வதுபோல் இருக்கின்றன இவரது கவிதைகள்.

வறட்சி

வானுக்கு இல்லை இரக்கம். பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு.
காற்றுக்கு விடை சொல்லித்
துக்கித்து இருக்கிறது வீதி.
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய் வறண்டு
சுருண்டு விட்டன
தாகித்து அணுகுகிற வாளிக்கு,
என்ன சொல்வது பதில் ?
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை.

சுந்தரராஜனின் சாட்சித்தன்மையும், உணர்ச்சி வடிந்த குரலும் மொண்ணத் தனத்தை சார்ந்தவை அல்ல. அதற்கு நேர்மாறாக வீணையின் கம்பிபோல் வலுவும் ரீங்காரமும் கொண்டவை. ஒரு நுட்பமான வாசக இதயமே இவரது கவலைகளையும் பகிர்ந்துகொள்ளமுடியும்.  வாழ்வின் மையத்தில் மனிதனை வைத்துப் பார்க்கும் ஒரு பார்வை. காரியங்களின் விளைவுகளை மனித நலன்களில் உரைத்துப் பார்க்கும் பார்வை. இவை பல கவலைகளும் சில ஆசுவாசங்களும் கொள்கின்றன. மனித உறவுகளுக்குக் குறுக்கே நிற்கும் வில்லங்கங்களால் கவி மனம் வருந்துவதை உணரலாம். வாழ்கையின் கோலங்களையும் மாற்றங்களையும் ஒரு எல்லை வரையிலும் இயற்கையாகக் காண விவேகம் கொண்ட இந்த மனங்கூட வாழ்வின் தளத்தில் வருத்தங்கள் கொள்ள நேருகிறது.  ஆனால் வருத்தங்களால் மனம் சுருங்கிப்போக மறுத்து, தன்னை புற உலகத்தோடு பிணைத்துக்கொண்டு அடிப்படையான தீர்வுகளுக்கு ஏங்குகிறது.  இத்தனைக்கும் வாழ்வு சார்ந்த பெரிய கனவொன்றும் கவிக்கு இல்லை. துணை, வீடு, நிம்மதி, பிறருடன் கூடிக் கலந்து வாழ்தல், இயற்கையின் அழகுகளோடும் ஆசுவாசங்களோடுமான உறவுகள், உறவுகளில் முட்களற்ற வாழ்க்கை. இவ்வளவுதாம்.

சிறு சிறு பகுதிகளாக தன் அனுபங்களைப் பதிவு செய்து பார்வையின் ரேகைகளை உணர்ந்த மனம், தம் பார்வையை தொகுத்துப் பார்க்க முயன்ற முயற்சி ‘உயிர் மீட்சி’ என்ற கவிதை எனலாம். இந்த பார்வைத் தொகுப்பு முக்கியமானது; பரஸ்பரம் மனம் விட்டுப் பேசிக்கொண்ட நிம்மதியைக் கவிக்கும் வாசகனுக்கும் தரக்கூடியது. இங்கு வாழ்க்கையின் கோலம், கனவு, ஆசுவாசம் மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. அன்பும், பரஸ்பரம் புரிந்து கொள்ளும் ஆற்றலும், மனிதராசி நிறைவாகக் கொள்ளுமெனில் வாழ்க்கை இன்னும் எவ்வளவோ செம்மைப்பட முடியும். ஆனால் கரைய மறுக்கிறது. அன்பின் தளம் இறங்கி விட்ட வாழ்வைக் கற்பனை செய்து பார்க்கும் இவரது வரிகள் மனதை, கோணல் மனதை, கரைக்கின்றன. மிகவும் சுலப சாத்தியமான ஒன்று, மிகவும் சிரம சாத்தியமாகி விட்டதை எண்ணி நம மனம் வியாகூலம் கொள்கிறது.

உலகின் முதல் கவிக்குரல்கள், மனித அனுபவத்தை உண்மையாக பதித்த கவிக்குரல்கள், அன்பின் நெகிழ்ச்சியைப் போற்றின. இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் இன்றும், ஒரு இளங்கவி, தம் அனுபவங்களைச் சார்ந்து, அதே விடையைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இப்படி இருக்கிறது நம் வாழ்க்கை.

நாகர் கோவில்,
7, ஜனவரி, 1986.
Share: