Friday, June 28, 2013

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் - தமிழில் யூமா. வாசுகி




நேற்றைய தினம் வாழ்வில் ஒரு முக்கியமான தினம். நண்பனாகி மூன்று வருடங்கள் கழிந்திருந்தாலும் விந்தை மனிதன் ராஜாராமனுடன் பேசிய காலம் நிமிடங்களில்தான் உண்டு. தன் வேலை விடயமாக சென்னை வந்திருக்கும் ராஜாராமனுடன் முதல் முறையாக தனிமையில் நிறைய நேரம் பேச வாய்த்தது நேற்று.  முதலில் ஒரு ஒன்னரை மணி நேரம் ஒரு ஹைடெக் தேநீர் விடுதியின் தொடங்கிய பேச்சு முடிந்த இடம் இரவு 8.30 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ்.  பேச்சின் போக்கு காமத்தை பற்றி திரும்பியதும் விரா அருந்ததி கதையை சொல்ல ஆரம்பித்தார்.   தேவ ரிஷிகளின் மனைவிகளின் மீது ஆசைப்பட்ட இந்திரன் அவர்களுடன் உறவுகொள்ள ஆசைப்பட , அதை அறிந்து கொண்ட இந்திரனின் மனைவி , ஒவ்வொரு ரிஷி மனைவி மாதிரியும் பொய்யுருவெடுத்து தானே கணவனுடன் உறவு கொண்டதாகவும், ஆனால் அவளால் அருந்ததியின் உருவத்தை பெற முடியாமல் தோற்றுப் போனாள் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார். அதன் மூலம் அருந்ததி ஒரு பெரிய பதிவிரதையாக காட்சிப் படுத்த படுவாதகவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் இந்த கதையை சொல்லிக்கொண்டிருந்த போது எனக்கு கிருஷ்ணபிரபு சொன்ன ஒரு புத்தகம் பற்றி நியாபகம் வந்தது. அந்த புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வாசிரம குறிப்பு ஒன்று இருப்பாதாக இங்கே (ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ்) உலவிக்கொண்டிருப்பதுவும் மனதின் குறுகுறுப்புக்கு ஒரு காரணம். ஆனால் வேடியப்பனிடம் கேட்கும் போது அந்த புத்தகத்தின் பெயர் மட்டும் நியாபகம் வரவில்லை. விராவிடம் கேட்டாலும் அவருக்கும் அந்த புத்தகம் அறிமுகம் இல்லை. இந்த தருணத்தில் சிறு வயதில் கோவில்பட்டி பஸ்ஸடாண்டில் சரோஜாதேவி புத்தகத்தை தயங்கி தயங்கி புத்தக கடை காரரிடம் கேட்டது நியாபகம் வந்தது. நல்ல வேலை இப்பொழுது அந்த தயங்கங்களும் இல்லை.  சரோஜாதேவி புத்தகமே கேட்டாலும் அதில் தப்பொன்றுமில்லை என்பதை தெளிவுற உணர்ந்திருக்கிறேன்(றோம்).  புத்தகத்தை பற்றிய நியாபகமிருந்த ஒரே குறிப்பு யூமா வாசுகி மொழிபெயர்ப்பு என்பது மட்டுமே.

மிகவும் சரியாக யூகித்து வேடியப்பன் தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரங்கள் என்ற இந்த புத்தகத்தை எடுத்து நீட்டினார்.  புத்தகத்தை சற்று புரட்டிய விரா எப்படிய்யா 64 பேர என்றார் ஆச்சர்யம் அடங்காமல்.  இதுக்கெல்லாம் நீங்கள் விராவை தப்பாக நினைப்பது ஆகாது. பேசிக்கலி அவர் ஒரு நல்ல மனிதர் அல்லது நாங்கள் இருவருமே.  டிஸ்கவரி புக் பேலசுக்கு முந்தைய ஹைடெக் தேநீர் விடுதியின் உரையாடலில் விரா மனிதனின் குணம் என்பது இரண்டு வகையானது. ஒன்று காமம் சார்ந்தது. இன்னொன்று வன்முறை சார்ந்தது.  இந்த உலகத்தில் ஆண் என்பவன் பெண்ணின் மீது காமத்தையும், வன்முறையையும் பிரோயிக்கிறான்.  அதே வன்முறையை குழந்தைகள் மீதும் நாம் பிரோயிக்க தவறுவதுமில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். முடிவில் இதெல்லாம் ஜெமோவில் கூறுகள் என்றும் சொல்லிப் போனார். 

இதெல்லாம் மனதினில் ஒட இன்று காலை சாப்பிட்டு முடித்த பின்னர் , சரோஜா தேவி புத்தகத்தை கையில் எடுத்த சிறுவனின் மனநிலையில் இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.  முதலில் சில பக்கங்களை தாண்டுவதற்குள்ளயே இது வேறு வகையான புத்தகம் என மணம் உணரத் தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக ஆண் என்பவன் வன்முறையின் துணையுடன் பெண் உடம்பின் மீது நடத்திக் காட்டிய அரசியலை, தன் புத்தி சாதுர்யத்தால் தகர்த்தெரிய முற்பட்ட ஒரு பெண்ணாகவே தாத்திரிக் குட்டி மனதில் பரவ ஆரம்பித்தாள்.  தான் பிறந்ததில் இருந்தே  அவள் ஒரு சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு தேவலோக சுந்தரியாகவே மற்றவர் கண்களுக்கு தெரிந்தாள்.  வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியினால், வயதில் பெரிய ஆண்களில் பாதிக்கு மேற்பட்ட ஆண்கள் அவளை மோகிக்க வேண்டியே அவளிடம் பைத்தியம் பிடித்து திரிந்திருக்கின்றனர். இதில் வேதனையே அவளின் தகப்பனும், அண்ணனும் அதில் அடக்கமென்பதே. 

இதெல்லாம் அவள் திருமணம் முடித்து , அவள் முதலிரவில் நடந்த ஒரு துயர் மிகு சம்பவமே அவளை ஆண்களை பலி வாங்க தூண்டியதாகத் தெரிகிறது.  அவளிடம் உறவு கொண்டதாக சொல்லப்பட்ட 64 ஆண்களை பற்றிய குறிப்புகள் எதுவும் எங்கேயும் இல்லை எனவும், தாத்ரிக்குட்டியை பற்றிய பாட்டி மார் கதைகளும், நாட்டார் கதைகளும் அவற்றினை பற்றிய புனைவுகளின் ஊடாக சென்று ஒரு ஆய்வுக் கட்டுரை மாதிரியான முயற்சிதான் தன்னுடைய இந்த முயற்சி எனவும் நூலாசிரியர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் சொல்கிறார். அப்படி ஒரு கதையே எம்.ஜி.ஆர் அவர்களின் பூர்வாசிரம குறிப்பாகவும் புத்தகத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த 64 பேரயும்  விசாரணையின் முடிவில் சாதி நீக்கம் செய்ததாகவும் அவர்கள் வீட்டை விட்டும் ஊரை விட்டும் விலகிச்சென்று எங்கெங்கோ வாழ்ந்து , கடைசியில் அறியப்படாதவர்களாவும் ஆகிப்போனதை சொல்லிப்போகிறது  இந்த புத்தகம். 

தாத்திரிக்குட்டியின் இந்த புரட்சி  , கேரள சமுதாய கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றிப்போட்டதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.  64 பேர்களில் ஒருவராக காட்டப்பட்டிருக்கும் கதகளி  கலைஞர் கவுங்கல் சங்கரப்பணிக்கர் சாதி நீக்கம் செய்யப்பட்டதாலயே, மேல் சாதியினரால் மேல் சாதியினருக்கென இருந்த கதகளி நடனத்தை கீழ்சாதியினரும் பங்குபெறும் மாதிரி ஜனரஞ்சமாக மாற்றி புரட்சிக்கு வித்திட்டதையும் புத்தகம் அழகாக காட்சிபடுத்தியிருக்கிறது.  

எல்லோரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவண புத்தகமிது. 

தாத்த்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்
மூலம் : ஆலங்கோடு லீலாகிருஷ்ணன்
தமிழில் : யூமா வாசுகி
விலை : 70 ரூபாய்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Share:

0 comments:

Post a Comment