Saturday, January 26, 2019

அன்புள்ள ஏவாளுக்கு - கடவுளைத் தேடியவள்


முன்குறிப்பு

ஒவ்வொரு ஆண்டும் புத்தக காட்சியில் ஆர்வ மிகுதியில் புத்தகங்களை வாங்கி, வாங்கிய முதல் மூன்று மாதங்களில் அதில் ஒரு ஐந்தாறு புத்தகங்களை வாசித்து, மிஞ்சியவற்றில் பத்து பதினைந்து பக்கங்களை வாசித்து , அப்படியே அந்த புத்தகங்களை தூர வைத்துவிட்டு வேலையில் முழ்குவதே வாடிக்கையையாகி போகிவிட்டது.   அப்படி வாசித்த புத்தகங்களை பற்றிய குறிப்புகளை எழுத வேண்டும் என நினைத்து அப்படியே போய்விடுகின்றது.   இந்தாண்டாவது எழுதி விட வேண்டும் என நினைத்து அப்படியான முதல் பதிவு இது.   இந்த பதிவுகள் சிறு குறிப்பு மட்டுமே அன்றி விமர்சனங்களோ  காத்திரமான இலக்கிய கட்டுரைகளோ அல்ல. 

The  Colour Purple  - அன்புள்ள ஏவாளுக்கு

” எனக்கு பதினான்கு வயதாகிறது. நான் எப்போதும் ஒரு நல்ல பெண்ணாகத்தான் இருக்கிறேன் இருந்திருக்கிறேன். எனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நான் புரிந்துகொள்ள நீ எனக்காக ஒரு சகுனம் காட்டக்கூடாதா “



தன் சிறுவயதிலையே தன் தாயை இழந்து தனக்கு என்ன நடக்கிறது என்ன புரியத் தொடங்கும் முன்னரே தன் தகப்பன் என நம்பபட்டவனால் சீரழிக்கப்பட்ட, அவன் வயதிற்கு ஒத்த இன்னொரு ஆணுக்கு மணமுடித்து தரப்பட்டு , தான் உரையாடுவதற்கு எந்த துணையுமில்லாமல் கடவுளிடம் உரையாடத்தொடங்கி , முடிவில் கடவுள் யார் என கண்டடையும் பெண்ணின் கதை இது. ஆங்கிலத்தில் ஆலிஸ் வாக்கர் எழுதிய “ தி கலர் பர்ப்பிள்” ளை தமிழில் “அன்புள்ள ஏவாள்” என ஷகிதா மொழிபெயர்த்துள்ளார். 



இந்த நாவலில் சீலிக்கும் ஷூக்கும் நடைபெறும் இந்த உரையாடலே இந்த நாவலின் மொத்த சாரம்சமும். 



“நான் சொல்ல வரும், நம்பும் விஷயம் என்னவென்றால், கடவுள் உனக்குள்ளும் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். நாம் இந்த உலகத்துக்கு வந்ததே அவரோடுதான். ஆனால் யார் அவரைத் தமக்குள் தேடுகிறார்களோ அவர்களே கண்டடைவார்கள். சிலசமயங்களில் நாம் அதை தேடாத போதும், என்ன தேடுகிறோம் என்றறியாத போதும் கூட அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். பிரச்சினைகளில், துயரங்களில் தான் பெரும்பாலான மக்கள் கடவுளைக் கண்டடைந்துகொள்கிறார்கள். 



என்ன சொன்னாய் ? “அது” வா? 



ஆம் “அது” தான். கடவுள் அவனோ அவளோ அல்ல. “அது” தான் 



சரி அது பார்க்க எப்படி இருக்கும்? 



அது எதைப் போலவும் இருக்காது. அது ஒரு படம் அல்ல காட்டுவதற்கு. மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அதைப் பார்க்க முடியாது. உன்னிடம் இருந்தும் தான். எல்லாமே கடவுள் தான் என்று நான் நம்புகிறேன். இதுவரையில் இருந்த, இப்பொழுதும் இருக்கிற, இனி இருக்கப்போகிற எல்லாமும்தான். அதை நீ உணரும்போது, அதை உணர்ந்து கொண்டதில் மகிழும் போது, நீ அதைக் கண்டடைகிறாய்.” 



உரையாட ஆளில்லாமல் 



“ அன்புள்ள கடவுளுக்கு “ என உரையாடலை தொடங்கி 



பின்னர் 



”பிரிய நெட்டி” 



என அன்பு தஙகையுடன் உரையாட ஆரம்பித்து 



பின்னர் 



”அன்புள்ள கடவுளே, நட்சத்திரங்களே, பிரியமான என் வானமே, அன்பான மக்களே, அன்பான எல்லாமுமே, அன்பு இறைவா” 



என அன்புதான் இறைவன் என கண்டுணரும் சீலி என்ற பெண்ணின் பயணமே இக்கதை. 



இந்த புத்தகத்தை ஷகிதா மிக சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். 



எதிர் வெளியீட்டில் கிடைக்கிறது.
  

அன்புடன்,

க. ராமசாமி





Share:

0 comments:

Post a Comment